குருவருள்

குருவருள்
குருவே சரணம்

புதன், 3 மார்ச், 2010

சங்க இலக்கியச் சுவை பகுதி - [03] நற்றிணை விருந்து (0 2 )



10. பாலை

தோழி கூற்று.                                                                  { உடன் போக்குந் தோழியைப் பாதுகாப்பாயாக

(பாடினோர் பெயர் தெரியவில்லை)


அண்ணாந்து ஏந்திய வனமுலை தளரினும்,
பொன்னேர் மேனி மணியில் தாழ்ந்த
நன்னெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்,
நீத்தல் ஓம்புமதி - பூக்கேழ் ஊர
இன்கடுங் கள்ளின் இழையணி நெடுந்தேர்க்

கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீஇயர்,
வெண்கோட்டு யானைப் பேஎர் கிழவோன் 
பழையன் வேல்வாய்த்து அன்னநின் 
பிழையா நன்மொழி தேறிய இவட்கே.

பதவுரை :       
பூக்கேழ் ஊர - மலர்கள் விளங்கிய பொழில் சூழ்ந்த ஊரை  உடையவனே;
இன் கடுங் கள்ளின் - இனிய கடுப்புடைய கள்ளுணவையும்;
இழையணி நெடுந்தேர் - அணிகலன் அணிந்த நெடிய தேர்களை உடைய;
கொற்றச் சோழர் - வலிமை வாய்ந்த சோழ மன்னர்; 
கொங்கர்ப் பணீஇயர் - கொங்கரை அடக்கும் பொருட்டு;
வெண்கோட்டு யானை - வெண்மையான தந்தங்களை உடைய
                                                            யானைகளை உடைய;
பேஎர் கிழவோன் - ‘பேஎர்’ என்னும் ஊரின் தலைவானாம்;
பழையன் - ‘பழையன்’ என்னும் சேனாபதியிடத்து;
வேல் வாய்த்து அன்ன - தப்பாத வேற் படையைப் பெற்று 
                                                         வைந்திருந்தாற் போன்ற;
நின் - உன்னுடைய;
பிழையா - பிழைபடாத;
நன்மொழி - நல்ல மொழியைக் கேட்டு;
தேறிய இவகட்கு - உண்மையெனத் தெரிந்த இவளுக்கு;
அண்ணாந்து - நிமிர்ந்து;
ஏந்திய - உயர்ந்த;
வன முலை - அழகிய தனங்கள்;
தளரினும் - தளர்ந்தாலும்;
பொன் ஏர் மேனி - பொன் போன்ற மேனியிலே;
மணியில் - கருமணி போல;
தாழ்ந்த - தாழ்ந்து தொங்கிய;
நன்நெடுங் கூந்தல் - நல்ல நெடிய கூந்தல்;
நரையொடு முடிப்பினும் - நரையுடனே முடிக்கப் பெற்றலும்;
நீத்தல் ஓம்புமதி -[அவ்வேளையில் இவள் நம் கூடலுக்கு 
                                             பயன் படாது முதுமை அடைந்தாள் என்று கருதி]  
                                            விட்டு பிரியாது பாதுகாப்பாயாக.    
               
                                                              

திங்கள், 1 மார்ச், 2010

சங்க இலக்கியச் சுவை - பகுதி - [02] நற்றிணை விருந்து ( 1 )



001  குறிஞ்சி

தலைவி கூற்று

 {  தலைவன் பிரியக் கருதியது அறிந்த தோழி அதனைத் தலைவியிடம் கூற, தலைவி தலைவனைப் புகழ்ந்து கூறியது. }

நின்ற சொல்லர் நீடுதோன்(று) இனியர்;
என்றும் என்தோள் பிறிபறி யலரே
தாமரைத் தந்தாது ஊதி மீமிசைச்
சாந்தில் தொடுத்த தீந்தேன் போலப்,
புரைய மன்ற, புரையோர் கேண்மை 
நீரின்(று) அமையா உலகம் போலத் 
தம்மின்(று) அமையா நம்நயந்(து) அருளி;
நறுநுதல் பசத்தல் அஞ்சிச் 
சிறுமை யுறுபவோ? செய்பு அறியலரே.

பதவுரை :


தோழீ ! நம் காதலர்,
 நின்ற சொல்லர் - நிலைமை தவறாத வாய்மை
                                        உடையவர்,
 நீடு தோன்று இனியர் - நெடிதாக தோன்றுகின்ற இனிமை
                                                     உடையவர்,
என்றும் எந்தோள் பிரிபு அறியலர் - எப்பொழுதும் என்
                                      தோள்களை பிரிய வேண்டும் என்ற
                                      எண்ணமிலாதவர்,
புரையோர் கேண்மை - அப்படிப்பட்ட சான்றோருடைய நட்பு,
தாமரைத் தண்தாது - தாமரையின் குளிர்ந்த மகரந்தத்தினையும்,
மீமிசை - மேலோங்கிய,
சாந்தின் (தாது)-சந்தனத்தின் பொடியையும்,
ஊதி - குடைந்தெடுத்து,
தொடுத்த - அந்தச் சந்தன் மரத்தில் வைத்த,
தீந்தேன் போல - இனிய தேன் போல,
மன்ற புரைய - திண்ணமாகச் சிறந்தன,
(ஆதலின்)நீரின்றமையாஉலகம் போல் - நீரை 
                                       இன்றியமையாத உலகியல் போல,
தம்மின்று அமையா - அவர் தம்மையின்றி அமையாத,
நம் நயந்தருளி - நம்மிடம் முன்பு விருப்பம் மிக வைத்தருளி,
நறு நுதல் பசத்தல் அஞ்சி - (பின்பு பிரிதலால்) நம் நறிய 
                                                                           நெற்றி பசலை ஊர்தற்கு அஞ்சி,
சிறுமை உறுபவோ - (செய்வது அறியாராய்த்)தடுமாற்றம் 
                                                      அடைவாரோ?
செய்பு அறியலர் - அவ்வாறு செய்யார் காண்.  


முடிபு :


பிரிவு அறியலர், புரைய மன்ற, அஞ்சிச் சிறுமை உறுபவோ,
செய்பு அறியலர் என் முடிக்க.


கருத்து:தலைவர் சான்றோர் ஆகையால், பிரிவால்
                  நாம் படுந்துன்பம் கண்டஞ்சி நம்மை விட்டுப் பிரியார்.


நயம் :  தாமரையின் குளிர்ந்த மகரந்தத்தம் - தலைவனது உள்ளத்திற்கும்,
                     சந்தனத்தின் பொடி -  தலைவியின் உள்ளத்திற்கும், 
                                                                        உவமையாயிற்று.
               இருவருள்ளமும் ஒன்றுபட்ட போது, சந்தன் மரத்திலே இனிமையான தேன் கூடு வைத்தது போலத் தலைவன் தலைவிபால் அன்பு வைத்தான் என்று பொருள் நயம் காண்க.


பசலை பாய்தல் - வாயினால் ஊதும் போது கண்ணாடியில் ஆவி படர்வது போலத் தலைவன் பிரிவினால் தலைவியின் நெற்றியில் ஒளி குறைந்து நிறம் மாறுபடும்.இதனைப் பசலை எனவும், பீர் எனவும் கூறுவர்.                                
           
உலகமானது நீரின்று இயங்காது போல் தலைவியானவள் தலைவனை பிரிந்து இயங்காளென்ற நயம் உணர்க.