குருவருள்

குருவருள்
குருவே சரணம்

புதன், 9 ஜூன், 2010

சங்க இலக்கியச் சுவை - பகுதி (09) -குறுந்தொகைபுறநானூறு

பாடல் - 38 / தலைவி கூற்று
பாடியவர் : கபிலர்
[ தலைவன் திருமணம் செய்ய வேண்டி பொருள் தெடுவதற்காகப் பிரிந்து நீண்ட காலமாக
வராது இருக்க, வ்ருத்தம் அடைந்த தலைவியைப் பார்த்து தோழி, “உன்னைத் திருமணம்
செய்யும் பொருட்டு அன்றோ தலைவர் பொருளீட்டச் சென்றுள்ளார்; அவ்வாறு இருக்க நீ
அவ்வாறு சென்றதை நன்மையாகக் கருதாமல் வருத்தம் கொள்வது என்ன காரணம்
பற்றி?” என்று கேட்டாள். “தலைவரது பிரிவினை ஆற்றும் வலிமை என்னிடம்
இல்லை” என்று தலைவி கூறினாள்.]

கான மஞ்சை யறையீன் முட்டை
வெயிலொடு முசுவின் குருளை யுருட்டும்
குன்ற நாடன் கேண்மை யென்றும்
நன்றுமன் வாழி தோழி யுண்கண்
நீரொ டொராங்குத் தணப்ப
உள்ளா தாற்றல் வல்லு வோர்க்கே.

(வரைவு நீட்டித்த வழித் தலைமகள் தனது ஆற்றாமை தோன்றத் தோழிக்குக் கூறியது)

திங்கள், 7 ஜூன், 2010

சங்க இலக்கியச் சுவை - பகுதி (08) - புறநானூறு


[204] ”ஈ” என இரத்தல் இழிவுடையது 

பாடியவர் : கழைதின் யானையார்
பாடப்பெற்றவர்: வல்வில் ஓரி

திணை :                   பாடாண்திணை [ பாடப்பெறும் ஆண்மகனின் 
                                        புகழ், வலிமை கொடை,கருணை, 
                                         ஆகியவற்றை உரைத்தல்]

துறை :                   பரிசில் [ அரசன் முன்னே தாம் பெறக்
                                           கருதியதை  உரைத்தல்.பரிசினைப் பாராட்டுதல்]


’ஈ’ என இரத்தல் இழிந்தன்று; அதன் எதிர்’
‘ஈயேன்’ என்றல் அதனினும் இழிந்தன்று;
’கொள்’ எனக் கொடுத்தல் உயர்ந்தன்று ;அதன் எதிர்,
’கொள்ளேன்’ என்றல் அதனினும் உயர்ந்தன்று;
தெண்நீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங் கடல் (05)

உண்ணார் ஆகுப, நீர் வேட்டோரே;
ஆவும், மாவும் சென்று உண, கலங்கி 
சேற்றொடு பட்ட சிறுமைத்து ஆயினும்,
உண்நீர் மருங்கின் அதர் பல ஆகும்;
புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை, (10)

உள்ளிச் சென்றோர்ப் பழியலர்; அதனால்
புலவோன் - வாழியர், ஓரி! விசும்பில்
கருவி வானம் போல
வரையாது சுரக்கும் வள்ளியோய்! நின்னே. (14)


           பொதுவாகப் புலவர்கள் அரசர்கள், வள்ளல்கள் முன் சென்று அவர்களைப் பற்றி உயர்வாக, மிகைப்படப் புகழ்ந்து பாடி, அவ்வள்ளல்கள் எதைக்க் கொடுத்தாலும் பெற்றுத் தம் வறுமைப் பிணியினைப் போக்கிக் கொள்வார்கள் என்று அவர்களைப் பற்றி ஒரு தவறான கருத்து நிலவி வருகிறது. ஆனால், அப்படிக் கூறப்படுகின்ற கருத்து மிகவும் தவறானது என்றும், புலவர்கள் உயர்ந்த கொள்கையினை உடையவர் என்றும் உணர்த்து புநானூற்றுப் பாடல்
மேலே உள்ள பாடலாகும். அது கூறும் உண்மைப் பொருள் பற்றி ஈண்டு காண்போமாக.

           கடையெழு வள்ளல்களுள் ஒருவனான வல்வில் ஓரியினைப் பார்த்து, தன்வறுமையினைத் தீர்த்துக் கொள்வதற்காக புலவர் கழைதின் யானையார் வந்திருந்தார்.வல்வில் ஓரியும் புலவரை வரவேற்று அவருக்கு உணவும், உடையும் அளித்து உபசரித்தான்.ஆனால் புலவரின் வறுமை நோயினைத் தீர்க்கும் மருந்தான பரிசுப் பொருள்களைத் தராது காலத்தை நீட்டினான். அப் பொழுது புலவர் கழைதின் யானையார் பிவருமாறு கூறத் தொடங்குகிறார்.

            ”ஒருவரிடம் சென்று எனக்கு ஒரு பொருளை ‘ஈ’ என்று யாசிப்பது இழிவானது ஆகும். அப்படித் தன்னிடம் யாசகம் கேட்ட ஒருவருக்கு ‘ஈயேன்
(கொடுக்கமாட்டேன்) என்று கூறுவது ஈ என யாசிப்பதனை விட இழிவான செயலாகும். தகுதியான ஒருவருக்கு, அவருடைய வறுமையினைப் போக்கிக் கொள்ள அவர் கேட்காமலே அவருக்கு வேண்டியவற்றைக் கொடுப்பது உயர்ந்த பண்பாகும்.அவ்வாறு கொடுப்பனவற்றை மறுத்துக் கூறுவது பிறருக்கு கொடுப்பதைவிட உயர்ந்த பண்பாகும்.” 

                 “ஒருவருக்கு வெம்மைகுதியால் தாகம் ஏற்பட்டாலும், அருகே மிகுந்த நீர் பரப்பினை உடைய கட்ல் இருந்தாலும் கடலின் நீரை அருந்த மாட்டார்கள். பசுக்களும், பல்வேறு வகையான மிருகங்களும் சென்று குடித்து கலக்கிய சேறானாலும், குடிநீர் குளத்திற்குச் செல்ல பல வழிகள் உளவாகும். வள்ளலே1 அரசர்களிடம் தம் வறுமையைப் போக்க வேண்டிய பொருள் புலவர் பெருமக்களுக்கு கிடைக்கப்பெறாவிட்டாலரசர்களைப் பழித்துக் கூறமாட்டார்கள். அவ்வாறு தங்களுக்குப் ப்ரிசில் கிடைக்காமல் போனதற்கு தாங்கள் பரிசில் வேண்டி புறப்பட்டப் போது ஏற்பட்ட சகுனமும், புறப்பட்ட பொழுதும் சரியில்லை என தங்களை நொந்து கொள்வார்களே தவிர உன்போன்ற அரசர்களை பழித்துக் கூற மாட்டார்கள்.ஆகையினால் மழையினைப் போல் பயன் கருதாது யாவருக்கும் வேறுபாடின்றி வழங்கும் வல்வில் ஓரியே உன்னை நான் வெறுக்க மாட்டேன்”  

     என்னே சங்க காலப் புலவர் பெருமக்களின் உயர்ந்த பண்பு!




































































































செவ்வாய், 4 மே, 2010

சங்க இலக்கியச் சுவை பகுதி (07) - நற்றிணை




294. குறிஞ்சி
தோழிகூற்று

பாடியவர் : புதுக்கயத்து, வண்ணக்கன் கம்பூர்கிழான்

தீயும் வளியும் விசும்புபயந் தாங்கு
 நோயும் இன்பமும் ஆகின்று மாதோ
மாயம் அன்று தோழி வேய்பயின்று 
எருவை நீடிய பெருவரை அகந்தொறும்
தொன்றுறை துப்பொடு முரண் மிகச் சினைஇக் (05)

கொன்ற யானைக் கோடுகண்டு அன்ன
செம்புடைக் கொழுமுகை அவிழ்ந்த காந்தள்
சிலம்புடன் கமழும் சாரல்
இலங்குமலை நாடன் மலர்ந்த மார்பே. (09)

தலைவியே! மூங்கில் செறிந்து, கொறுக்கச்சி எங்கும் படர்ந்து பரவிய, பெரிய மலையிடம் எங்கும் தொன்று தொட்டு எழுந்து  வந்த மலையெங்கும் தொன்றுதொட்டு  எழுந்து வந்த பகைமையின் அடிப்படையில் மாறுபாடு கொண்டு மிகவும் சினந்து புலியைக் கொன்ற யானையின் தந்தத்தைக் கண்டது போன்ற சிவந்த செழுமைமையான அரும்புகள் மலர்ந்த காந்தள் பூக்கள் மலையிடம் எங்கும் மணம் வீசும் மலைநாடனது அகலமான மார்பானது பொறுத்துக் கொள்ள இயலாத நெருப்பையும், பொறுத்தற்குரிய இனிமையான காற்றையும் பெற்றதைப்போல துன்பத்தையும், இன்பத்தையும் ஒன்றாகப் பெற்றுள்ளது. இது பொய்யில்லை. உண்மையே ஆகும் என்பதி நீ அறிவாயாக. 

 தலைவன் அருகில் இருக்கும் சமயம் தலைவி அழகு கொண்டு இன்புற்று மகிழ்ச்சி அடைவதும், தலைவன் பிரிகையில் துன்பமடைந்து வருத்தம் அடைவதும் மாயம் அன்று. 


திங்கள், 26 ஏப்ரல், 2010

சங்க இலக்கியச் சுவை பகுதி (06) - குறுந்தொகை




பாடல் 46  தலைவி கூற்று
இயற்றியவர் : மாமலாடன்
 
[ தலைவன் பிரிந்த காலத்தில் தலைவி ஆற்ற மாட்டாள் என்று கவலையுற்ற தோழியை நோக்கி, ‘என்னைத் துன்புறுத்தும் மாலைக் காலமும் தனிமையும் தலைவர் சென்ற நாட்டிலும் இருக்கும் 
ஆதலால் அவருக்கும்  அவைகளால் துன்பம் உண்டாகும். ஆதலால் அவர் விரைவாக வருவார் என்று நினைத்து நான் ஆற்றி இருக்கின்றேன்’ என்று தலைவி கூறினாள்.]


ஆம்பற் பூவின் சாம்ப லன்ன 
கூம்பிய சிறகர் மனையுறை குரீஇ
முன்றி லுணங்கன் மாந்தி மன்றத் 
தெருவினுண் டாது குடைவன வாடி
இல்லிறைப் பள்ளித்தம் பிள்ளையொடு வதியும்
புன்கண் மாலையும் புலம்பும் 
இன்றுகொ றோழியவர் சென்ற நாட்டே.  

தோழி=,
ஆம்பல் பூவின் சாம்பல் அன்ன = ஆம்பல் மலரின் வாட்டம் உறுதலை ஒத்த,
கூம்பிய சிறகர் = குவிந்த சிறகுகளை ஒத்த, 
 மனை உறை குரிஇ = வீட்டினிடத்து தங்கும் குருவிகள்,
முன்றில் உணங்கல் மாந்தி= முற்றத்தில் காய்கின்ற தாணியங்களைத் தின்று,
மன்றத்து = பொது இடத்தினில் உள்ள,
எருவின் நுண்தாது குடைவன ஆடி = எருவினது நுண்மையான பொடியைக்       
                                                                             குடைந்து விளையாடி,
இல் இறை பள்ளி = வீட்டின் இறப்பிலே,
தம் பிள்ளையொடு வதியும் = தம் குஞ்சுகளோடு தங்கி இருக்கும்,
புன்கண் மாலையும் =பிரிந்தவர்க்குத் துன்பத்தைத் தரும் மாலைக் காலமும்,
புலம்பும் = தணிமையும்,
அவர் சென்ற நாட்டு = அத் தலைவர் சென்ற நாட்டு = அத் தலைவர் பிரிந்து
                                                சென்ற நாட்டில் ,
இன்று கொல் = இல்லையோ?

விளக்கம் :  என்னுடைய பிரிவினால் தலைவரும் துன்பம் அடைவார். எனவே அவர் விரைந்து வருவார். தலைவர் சென்ற நாட்டிலும் துன்பம் தரும் மாலையும் தனிமையும் இருக்கும் என்பதால் அவற்றால் உண்டாகும் துயரத்தை அறிந்து அவர் என்னை நினைத்து மீண்டு வருவார். அதனை எண்ணி நான் ஆற்றுவேன் ஆயினேன் என்பது தலைவி கருத்து.

தலைவியின் கற்பு நெறி இங்கு படம் பிடித்துக் காட்டப் படுகின்றது.


வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! 
வாழ்க நற்றமிழர்!

வெள்ளி, 23 ஏப்ரல், 2010

சங்க இலக்கியச் சுவை - புறநானூறு - பகுதி (05)

பாடல் எண் : 182
பாடியவர் : கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
திணை : பொதுவியல் (எல்லத் திணைகளுக்கும்
பொதுவாந் தன்மையை உரைத்தல்)
துறை : பொருண்மொழிக் காஞ்சி (உயிர்க்கு உறுதி
தரும் சிறப்புப் பொருளை உரைத்தல்)


உண்டால் அம்ம, இவ் வுலகம் - இந்திரர்;
அமிழ்தம் இயைவது ஆயினும், ‘இனிது’ எனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவு இலர்;
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சி,
புகழ் எனின், உயிரும் கொடுக்குவர்,பழி எனின்,

உலகுடன் பெறினும், கொள்ளலர்; அயர்விலர்;
அன்ன மாட்சி அனையர் ஆகி,
தமக்கு என முயலா நோன் தாள்,
பிறர்க்கு என முயலுநர் உண்மையானே.


இவ்வுலகம் அழிந்துபடாமல் இன்னமும் இருக்கிறது ஏன் தெரியுமா? வான் உலகில் வாழ்கின்றதாகச் சொல்லப்படுகின்றவர்கள் அமிர்தம் என்ற ஒன்றை அருந்தியக் காரணத்தால் அவர்கட்கு இறப்பில்லை; மூப்பில்லை; பசியில்லை; எந்நாளும் இன்பமே அன்றி துன்பம் இல்லை என நம்பப் படுகின்றது. அத்தன்மை வாய்ந்த அமிர்தம் ஒருவர்க்கு கிடைக்கப் பெற்றால் என்ன செய்வார் தெரியுமா?

விருந்து புறத்ததாத் டானுண்டல் சாவா
மருந்தெனினு வேண்டற்பாற் றன்று.(குறள்-82)
விருந்தாக வந்தவர் வீட்டின் வெளியே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவாமருந்தாகிய அமிர்தமே ஆயினும் அது விரும்பத் தக்கதன்று என்ற வள்ளுவத்தின் அடிப்படையில் அவ்வமிர்தத்தை தானே தனிமையில் உண்ண மாட்டார்கள்.மேலும்,

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற (குறள்- 304)
முக மலர்ச்சியையும் அக மலர்ச்சியையும் கொல்கின்ற சினத்தை விட ஒருவருக்கு வேரு பகை இல்லை என்ற வள்ளுவர் கூற்றிற்கேற்ப எவரிடத்தும்
சினம் கொள்ளார்.

தூக்கம் இல்லாமல் எப்போதும் விழிப்பு நிலையில் இருப்பர். உலகோர் செய்வதற்கு அஞ்சும் தீய் செயல்களைச் செய்ய அஞ்சுவர். தன்னுடைய செயலால் தன்னுயிர் போனாலும் அதனால் புகழ் கிடைக்குமெனில் தன் இன்னுயிரையும் கொடுக்கத் தயங்க மாட்டார்கள். இவ்வுலகப் பொருள்கள் எல்லாவற்றையும் பெற்றாலுன் தன்னுடைய செயலால் தீராத பழி வருமானால் அப்பொருளை ஏற்கமாட்டார்கள்.எப்போது சோர்வின்றி செயலாற்றிக் கொண்டு இருப்பர். இப்படிப்பட்ட சிறப்புகளைக் கொண்டு தன்னலம் கருதாது பிறர் நலத்தையே எப்போதும் கருதி வாழ்பவர்கள் இருக்கின்ற காரணத்தால் தான் இவ்வுலகம் சிறப்புடன் இருக்கின்றது.

ஆகவே புறநானூறு கூற்றுப்படி தன்னலமின்றி பிறர் நலம் காண வாழ முயல்வோமாக.

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லாருக்கும் பெய்யும் மழை!


வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய
பாரத மணித்திருநாடு!







திங்கள், 19 ஏப்ரல், 2010

சங்க இலக்கியச் சுவை - பகுதி - [04] குறுந்தொகை


குறுந்தொகை - பாடல் [3]

[வரையாது ஒழுகும் தலைவன் வேலிப் புறத்தே நின்றதை அறிந்த தோழி அவன் திருமணம் செய்து கொள்ள வேண்டு மென்னும்  எண்ணமுடையவளாகி அவன் காதிற்படுமாறு அவனத் நட்பைப் பழித்துக் கூறினாள். அதுபோது தலைவி அந்நட்பு மிகச் சிறப்பு உடையது என்று உணர்த்தியது.]

நிலத்தினும் பெரிதே வானினு முயர்ந்தன்று
நீரினு மாரள வின்றே சாரற் 
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தே னிழைக்கு நாடனொடு நட்பே.
இயற்றியவர் : தேவகுலத்தார்.

( தலைவன் வேலிக்குப் புறம்பாக, அவன் வரைந்து கொள்வது வேண்டித் தோழி இயல்பை இழித்துக் கூறியபோது  தலை மகள்  இயற்பட கூறியது )

மலைப் பக்கத்திலுள்ள வலிமையான கரிய கொம்புகளை உடைய குறிஞ்சி மரத்தின் மலர்களைக் கொண்டு, பெரிய தேனை வண்டுகள் செய்தற்கு இடமாகிய, நாட்டை உடைய தலைவனோடு  நான் செய்த நட்பானது பூமியைக் காட்டிலும் அகலமுடையது. ஆகாயத்தை காட்டிலும் உயர்ந்தது. கடலைக் காட்டிலும் ஆழமானது. எனவே தலைவனோடு செய்த நட்பு மிகச் சிறந்தது.

விளக்கம் : பன்னிரண்டு வருடத்திற்கு ஒருமுறை குறிஞ்சி  மலரும். அம்மலரினின்று தேனீக்களால் எடுக்கப்படும் தேன் மிக்க சுவைதரும். அப்படிப்பட்டச் சுவையான,  அளவில் பெரியதான  மலைத்தேனை உடைய  நாட்டிற்கு உரியவனாகியவன் நம் தலைவன். ஆகவே அவனும் உயர்ந்தவன்தான். எனவே நம் தலைவனைப் பழித்துக் கூறாதே.

இப்பாடலில்  நிலம், வான், கடல், என்ற மூன்றும்  பெருமைக்கு எல்லையாகக் கூறப்பட்டுள்ளன.

காலத்தி நாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.  (102)
பயன்றுக்கார் செய்த வுதவி நயன்றூக்கின்
நன்மை கடலிற் பெரிது  (103)
வானுயர் தோற்ற மெவன் செய்யுந் தன்னெஞ்சம்
தானறி குற்றப் படின்  (272) 

 



புதன், 3 மார்ச், 2010

சங்க இலக்கியச் சுவை பகுதி - [03] நற்றிணை விருந்து (0 2 )



10. பாலை

தோழி கூற்று.                                                                  { உடன் போக்குந் தோழியைப் பாதுகாப்பாயாக

(பாடினோர் பெயர் தெரியவில்லை)


அண்ணாந்து ஏந்திய வனமுலை தளரினும்,
பொன்னேர் மேனி மணியில் தாழ்ந்த
நன்னெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்,
நீத்தல் ஓம்புமதி - பூக்கேழ் ஊர
இன்கடுங் கள்ளின் இழையணி நெடுந்தேர்க்

கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீஇயர்,
வெண்கோட்டு யானைப் பேஎர் கிழவோன் 
பழையன் வேல்வாய்த்து அன்னநின் 
பிழையா நன்மொழி தேறிய இவட்கே.

பதவுரை :       
பூக்கேழ் ஊர - மலர்கள் விளங்கிய பொழில் சூழ்ந்த ஊரை  உடையவனே;
இன் கடுங் கள்ளின் - இனிய கடுப்புடைய கள்ளுணவையும்;
இழையணி நெடுந்தேர் - அணிகலன் அணிந்த நெடிய தேர்களை உடைய;
கொற்றச் சோழர் - வலிமை வாய்ந்த சோழ மன்னர்; 
கொங்கர்ப் பணீஇயர் - கொங்கரை அடக்கும் பொருட்டு;
வெண்கோட்டு யானை - வெண்மையான தந்தங்களை உடைய
                                                            யானைகளை உடைய;
பேஎர் கிழவோன் - ‘பேஎர்’ என்னும் ஊரின் தலைவானாம்;
பழையன் - ‘பழையன்’ என்னும் சேனாபதியிடத்து;
வேல் வாய்த்து அன்ன - தப்பாத வேற் படையைப் பெற்று 
                                                         வைந்திருந்தாற் போன்ற;
நின் - உன்னுடைய;
பிழையா - பிழைபடாத;
நன்மொழி - நல்ல மொழியைக் கேட்டு;
தேறிய இவகட்கு - உண்மையெனத் தெரிந்த இவளுக்கு;
அண்ணாந்து - நிமிர்ந்து;
ஏந்திய - உயர்ந்த;
வன முலை - அழகிய தனங்கள்;
தளரினும் - தளர்ந்தாலும்;
பொன் ஏர் மேனி - பொன் போன்ற மேனியிலே;
மணியில் - கருமணி போல;
தாழ்ந்த - தாழ்ந்து தொங்கிய;
நன்நெடுங் கூந்தல் - நல்ல நெடிய கூந்தல்;
நரையொடு முடிப்பினும் - நரையுடனே முடிக்கப் பெற்றலும்;
நீத்தல் ஓம்புமதி -[அவ்வேளையில் இவள் நம் கூடலுக்கு 
                                             பயன் படாது முதுமை அடைந்தாள் என்று கருதி]  
                                            விட்டு பிரியாது பாதுகாப்பாயாக.    
               
                                                              

திங்கள், 1 மார்ச், 2010

சங்க இலக்கியச் சுவை - பகுதி - [02] நற்றிணை விருந்து ( 1 )



001  குறிஞ்சி

தலைவி கூற்று

 {  தலைவன் பிரியக் கருதியது அறிந்த தோழி அதனைத் தலைவியிடம் கூற, தலைவி தலைவனைப் புகழ்ந்து கூறியது. }

நின்ற சொல்லர் நீடுதோன்(று) இனியர்;
என்றும் என்தோள் பிறிபறி யலரே
தாமரைத் தந்தாது ஊதி மீமிசைச்
சாந்தில் தொடுத்த தீந்தேன் போலப்,
புரைய மன்ற, புரையோர் கேண்மை 
நீரின்(று) அமையா உலகம் போலத் 
தம்மின்(று) அமையா நம்நயந்(து) அருளி;
நறுநுதல் பசத்தல் அஞ்சிச் 
சிறுமை யுறுபவோ? செய்பு அறியலரே.

பதவுரை :


தோழீ ! நம் காதலர்,
 நின்ற சொல்லர் - நிலைமை தவறாத வாய்மை
                                        உடையவர்,
 நீடு தோன்று இனியர் - நெடிதாக தோன்றுகின்ற இனிமை
                                                     உடையவர்,
என்றும் எந்தோள் பிரிபு அறியலர் - எப்பொழுதும் என்
                                      தோள்களை பிரிய வேண்டும் என்ற
                                      எண்ணமிலாதவர்,
புரையோர் கேண்மை - அப்படிப்பட்ட சான்றோருடைய நட்பு,
தாமரைத் தண்தாது - தாமரையின் குளிர்ந்த மகரந்தத்தினையும்,
மீமிசை - மேலோங்கிய,
சாந்தின் (தாது)-சந்தனத்தின் பொடியையும்,
ஊதி - குடைந்தெடுத்து,
தொடுத்த - அந்தச் சந்தன் மரத்தில் வைத்த,
தீந்தேன் போல - இனிய தேன் போல,
மன்ற புரைய - திண்ணமாகச் சிறந்தன,
(ஆதலின்)நீரின்றமையாஉலகம் போல் - நீரை 
                                       இன்றியமையாத உலகியல் போல,
தம்மின்று அமையா - அவர் தம்மையின்றி அமையாத,
நம் நயந்தருளி - நம்மிடம் முன்பு விருப்பம் மிக வைத்தருளி,
நறு நுதல் பசத்தல் அஞ்சி - (பின்பு பிரிதலால்) நம் நறிய 
                                                                           நெற்றி பசலை ஊர்தற்கு அஞ்சி,
சிறுமை உறுபவோ - (செய்வது அறியாராய்த்)தடுமாற்றம் 
                                                      அடைவாரோ?
செய்பு அறியலர் - அவ்வாறு செய்யார் காண்.  


முடிபு :


பிரிவு அறியலர், புரைய மன்ற, அஞ்சிச் சிறுமை உறுபவோ,
செய்பு அறியலர் என் முடிக்க.


கருத்து:தலைவர் சான்றோர் ஆகையால், பிரிவால்
                  நாம் படுந்துன்பம் கண்டஞ்சி நம்மை விட்டுப் பிரியார்.


நயம் :  தாமரையின் குளிர்ந்த மகரந்தத்தம் - தலைவனது உள்ளத்திற்கும்,
                     சந்தனத்தின் பொடி -  தலைவியின் உள்ளத்திற்கும், 
                                                                        உவமையாயிற்று.
               இருவருள்ளமும் ஒன்றுபட்ட போது, சந்தன் மரத்திலே இனிமையான தேன் கூடு வைத்தது போலத் தலைவன் தலைவிபால் அன்பு வைத்தான் என்று பொருள் நயம் காண்க.


பசலை பாய்தல் - வாயினால் ஊதும் போது கண்ணாடியில் ஆவி படர்வது போலத் தலைவன் பிரிவினால் தலைவியின் நெற்றியில் ஒளி குறைந்து நிறம் மாறுபடும்.இதனைப் பசலை எனவும், பீர் எனவும் கூறுவர்.                                
           
உலகமானது நீரின்று இயங்காது போல் தலைவியானவள் தலைவனை பிரிந்து இயங்காளென்ற நயம் உணர்க. 

வியாழன், 25 பிப்ரவரி, 2010

திருநாவுக்கரசர் சுவாமிகள் தேவாரம்


௧௦௯ திருப்பூந்துருத்தி

திருமறை : 06 / 95                                 தனித்திருத்தாண்டகம்


அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ 
                 அன்புடைய மாமனும் மாமியும் நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ
                 ஒரு குலமும் சுற்றமும் ஓர் ஊரும் நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ
                துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ
இப்பொன்நீ இம்மணிநீ இம்முத்துநீ
                இறைவன்நீ ஏறூர்ந்த செல்வம் நீயே                

வெம்ப வருகிற்பது அன்று கூற்றம் நம்மேல்
     வெய்ய வினைப் பகையும் பையநையும்
எம்பரிவு தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம் 
     எங்கு எழில் என்ஞாயிறு எளியோம்
                                                              அல்லோம் 
அம்பவளச் செஞ்சடைமேல் ஆறுசூடி
     அனலாடி ஆனஞ்சும் ஆட்டுகந்த 
செம்பவள வண்ணர் செங்குன்ற வண்ணர்
      செவ்வான வண்ணர் என் சிந்தையாரே. 
                             
ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே
      அடக்குவித்தால் ஆரொருவர் அடங்காதாரே
ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடாதாரே
       உருகுவித்தால் ஆரொருவர் உருகாதாரே
பாட்டுவித்தால் ஆரொருவர் பாடாதாரே
      பணிவித்தால் ஆரொருவர் பணியாதாரே
காட்டுவித்தால் ஆரொருவர் காணாதாரே
     காண்பார் ஆர் கண்ணுதலாய் காட்டாக்காலே.

நற்பதத்தார் நற்பதமே ஞான மூர்த்தீ                    
     நலஞ்சுடரே நால்வேதத்து அப்பால் நின்ற
சொல்பதத்தார் சொல்பதமும் கடந்து நின்ற
    சொலற்கரிய குழலாய் இது உந்தன்மை 
நிற்பதொத்துநிலை இலா நெஞ்சம் தன்னுள்
     நிலாவாத புலாலுடம்பே புகுந்து நின்ற 
கற்பகமே யானுன்னை விடுவேன் அல்லேன்
     கனகம் மாமணி நிறத்து எம் கடவுளானே

திருக்கோயில் இல்லாத திரு இல்லூரும் 
      திரு வெண்ணீற ணியாத திருஇல்லூரும் 
பருக்கோடிப் பத்திமையால் பாடா வூரும்
      பாங்கினோடு பலதளிகள் இல்லாவூரும்
விருப்போடு வெண்சங்கம் ஊதா வூரும்
      விதனமும் வெண்கொடியும் இல்லாத வூரும்
அருப்பொடு மலர்பறித்து இட்டு உண்ணாத 
                                                                            வூரும் 
      அவையெலாம் ஊரல்ல அடவி காடே.


திருநாமம் அஞ்செழுத்தும் செப்பாராகில் 
       தீவண்ணர் திறமொருகால் பேசாராகில்
ஒருகாலும் திருக்கோயில் சூழாராகில்
       உண்பதன் முன்மலர் பறித்திட்டு 
                                                       உண்ணாராகில்
அருநோய்கள்கெட வெண்ணீற னியாராகில்
       அளியற்றார் பிறந்தவாறு ஏதோ என்னில்
பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்தும்
                                                                செத்தும்
       பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றாரே.


நின் ஆவார் பிறரின்றி நீயே ஆனாய் 
       நினப்பார்கள் மனத்துக்கு ஓர்வித்தும் 
                                                                   ஆனாய்
மன்னானாய் மன்னவர்க்கும் ஓரமுதம் 
                                                               ஆனாய்
       மறை நான்குமானாய் ஆறங்கமானாய்
பொன்னானாய் மணியானாய் போகமானாய்
      பூமிமேல் புகழ்தக்க பொருளே உன்னை
என்னானாய் என்னானாய் என்னின ல்லால்
      ஏழையேன் என்சொல்லி ஏத்துகேனே.


அத்தா உன்னடியேனை அன்பால் ஆர்த்தாய்
அருள்நோக்கில் தீர்த்தநீர் ஆட்டிக்கொண்டாய்
எத்தனையும் அரியைநீ எளியை ஆனாய்
எனை ஆண்டுகொண்டு இரங்கி ஏற்றுக்
                                                                      கொண்டாய்      
பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன்
 பிழைத்தனகள் அத்தனையும் பொறுத்தாய்
                                                                           அன்றே.  
இத்தனையும் எம்பரமோ ஐய ஐயோ
எம்பெருமான் திருக்கருணை இருந்தவாறே

குலம் பொல்லேன் குணம் பொல்லேன் குறியும்
                                                                   பொல்லேன்
    குற்றமே பெரிது உடையேன் கோலமாய
நலம் பொல்லேன் நான்பொல்லேன் ஞானி 
                                                                    அல்லேன்
    நல்லாரோடு இசைந்திலேன் நடுவே நின்ற
விலங்கல்லேன் விலங்கல்லாது ஒழிந்தேன்
                                                                         அல்லேன்
    வெறுப்பனவும் மிகப்பெரிதும் பேசவல்லேன் 
இலம் பொல்லேன் இரப்பதே ஈயமாட்டேன் 
     என்செய்வான் தோன்றினேன் ஏழையேனே.


சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து
      தரணியொடு வானாளத் தருவரேனும் 
மங்குவார் அவர்செல்வம் மதிப்போம் அல்லோம்   
      மாதேவர்க்கு ஏகாந்தர் அல்லர் ஆகில் 
அங்கமெல்லாம் குறைந்து அழுகு தொழு
                                                                       நோயராய்
      ஆ உரித்துத் தின்று உழலும் புலையரேனும்
கங்கைவார் சடைக் கரந்தார்க்கு அன்பராகில்
      அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே.