குருவருள்

குருவருள்
குருவே சரணம்

திங்கள், 26 ஏப்ரல், 2010

சங்க இலக்கியச் சுவை பகுதி (06) - குறுந்தொகை




பாடல் 46  தலைவி கூற்று
இயற்றியவர் : மாமலாடன்
 
[ தலைவன் பிரிந்த காலத்தில் தலைவி ஆற்ற மாட்டாள் என்று கவலையுற்ற தோழியை நோக்கி, ‘என்னைத் துன்புறுத்தும் மாலைக் காலமும் தனிமையும் தலைவர் சென்ற நாட்டிலும் இருக்கும் 
ஆதலால் அவருக்கும்  அவைகளால் துன்பம் உண்டாகும். ஆதலால் அவர் விரைவாக வருவார் என்று நினைத்து நான் ஆற்றி இருக்கின்றேன்’ என்று தலைவி கூறினாள்.]


ஆம்பற் பூவின் சாம்ப லன்ன 
கூம்பிய சிறகர் மனையுறை குரீஇ
முன்றி லுணங்கன் மாந்தி மன்றத் 
தெருவினுண் டாது குடைவன வாடி
இல்லிறைப் பள்ளித்தம் பிள்ளையொடு வதியும்
புன்கண் மாலையும் புலம்பும் 
இன்றுகொ றோழியவர் சென்ற நாட்டே.  

தோழி=,
ஆம்பல் பூவின் சாம்பல் அன்ன = ஆம்பல் மலரின் வாட்டம் உறுதலை ஒத்த,
கூம்பிய சிறகர் = குவிந்த சிறகுகளை ஒத்த, 
 மனை உறை குரிஇ = வீட்டினிடத்து தங்கும் குருவிகள்,
முன்றில் உணங்கல் மாந்தி= முற்றத்தில் காய்கின்ற தாணியங்களைத் தின்று,
மன்றத்து = பொது இடத்தினில் உள்ள,
எருவின் நுண்தாது குடைவன ஆடி = எருவினது நுண்மையான பொடியைக்       
                                                                             குடைந்து விளையாடி,
இல் இறை பள்ளி = வீட்டின் இறப்பிலே,
தம் பிள்ளையொடு வதியும் = தம் குஞ்சுகளோடு தங்கி இருக்கும்,
புன்கண் மாலையும் =பிரிந்தவர்க்குத் துன்பத்தைத் தரும் மாலைக் காலமும்,
புலம்பும் = தணிமையும்,
அவர் சென்ற நாட்டு = அத் தலைவர் சென்ற நாட்டு = அத் தலைவர் பிரிந்து
                                                சென்ற நாட்டில் ,
இன்று கொல் = இல்லையோ?

விளக்கம் :  என்னுடைய பிரிவினால் தலைவரும் துன்பம் அடைவார். எனவே அவர் விரைந்து வருவார். தலைவர் சென்ற நாட்டிலும் துன்பம் தரும் மாலையும் தனிமையும் இருக்கும் என்பதால் அவற்றால் உண்டாகும் துயரத்தை அறிந்து அவர் என்னை நினைத்து மீண்டு வருவார். அதனை எண்ணி நான் ஆற்றுவேன் ஆயினேன் என்பது தலைவி கருத்து.

தலைவியின் கற்பு நெறி இங்கு படம் பிடித்துக் காட்டப் படுகின்றது.


வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! 
வாழ்க நற்றமிழர்!

வெள்ளி, 23 ஏப்ரல், 2010

சங்க இலக்கியச் சுவை - புறநானூறு - பகுதி (05)

பாடல் எண் : 182
பாடியவர் : கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
திணை : பொதுவியல் (எல்லத் திணைகளுக்கும்
பொதுவாந் தன்மையை உரைத்தல்)
துறை : பொருண்மொழிக் காஞ்சி (உயிர்க்கு உறுதி
தரும் சிறப்புப் பொருளை உரைத்தல்)


உண்டால் அம்ம, இவ் வுலகம் - இந்திரர்;
அமிழ்தம் இயைவது ஆயினும், ‘இனிது’ எனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவு இலர்;
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சி,
புகழ் எனின், உயிரும் கொடுக்குவர்,பழி எனின்,

உலகுடன் பெறினும், கொள்ளலர்; அயர்விலர்;
அன்ன மாட்சி அனையர் ஆகி,
தமக்கு என முயலா நோன் தாள்,
பிறர்க்கு என முயலுநர் உண்மையானே.


இவ்வுலகம் அழிந்துபடாமல் இன்னமும் இருக்கிறது ஏன் தெரியுமா? வான் உலகில் வாழ்கின்றதாகச் சொல்லப்படுகின்றவர்கள் அமிர்தம் என்ற ஒன்றை அருந்தியக் காரணத்தால் அவர்கட்கு இறப்பில்லை; மூப்பில்லை; பசியில்லை; எந்நாளும் இன்பமே அன்றி துன்பம் இல்லை என நம்பப் படுகின்றது. அத்தன்மை வாய்ந்த அமிர்தம் ஒருவர்க்கு கிடைக்கப் பெற்றால் என்ன செய்வார் தெரியுமா?

விருந்து புறத்ததாத் டானுண்டல் சாவா
மருந்தெனினு வேண்டற்பாற் றன்று.(குறள்-82)
விருந்தாக வந்தவர் வீட்டின் வெளியே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவாமருந்தாகிய அமிர்தமே ஆயினும் அது விரும்பத் தக்கதன்று என்ற வள்ளுவத்தின் அடிப்படையில் அவ்வமிர்தத்தை தானே தனிமையில் உண்ண மாட்டார்கள்.மேலும்,

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற (குறள்- 304)
முக மலர்ச்சியையும் அக மலர்ச்சியையும் கொல்கின்ற சினத்தை விட ஒருவருக்கு வேரு பகை இல்லை என்ற வள்ளுவர் கூற்றிற்கேற்ப எவரிடத்தும்
சினம் கொள்ளார்.

தூக்கம் இல்லாமல் எப்போதும் விழிப்பு நிலையில் இருப்பர். உலகோர் செய்வதற்கு அஞ்சும் தீய் செயல்களைச் செய்ய அஞ்சுவர். தன்னுடைய செயலால் தன்னுயிர் போனாலும் அதனால் புகழ் கிடைக்குமெனில் தன் இன்னுயிரையும் கொடுக்கத் தயங்க மாட்டார்கள். இவ்வுலகப் பொருள்கள் எல்லாவற்றையும் பெற்றாலுன் தன்னுடைய செயலால் தீராத பழி வருமானால் அப்பொருளை ஏற்கமாட்டார்கள்.எப்போது சோர்வின்றி செயலாற்றிக் கொண்டு இருப்பர். இப்படிப்பட்ட சிறப்புகளைக் கொண்டு தன்னலம் கருதாது பிறர் நலத்தையே எப்போதும் கருதி வாழ்பவர்கள் இருக்கின்ற காரணத்தால் தான் இவ்வுலகம் சிறப்புடன் இருக்கின்றது.

ஆகவே புறநானூறு கூற்றுப்படி தன்னலமின்றி பிறர் நலம் காண வாழ முயல்வோமாக.

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லாருக்கும் பெய்யும் மழை!


வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய
பாரத மணித்திருநாடு!







திங்கள், 19 ஏப்ரல், 2010

சங்க இலக்கியச் சுவை - பகுதி - [04] குறுந்தொகை


குறுந்தொகை - பாடல் [3]

[வரையாது ஒழுகும் தலைவன் வேலிப் புறத்தே நின்றதை அறிந்த தோழி அவன் திருமணம் செய்து கொள்ள வேண்டு மென்னும்  எண்ணமுடையவளாகி அவன் காதிற்படுமாறு அவனத் நட்பைப் பழித்துக் கூறினாள். அதுபோது தலைவி அந்நட்பு மிகச் சிறப்பு உடையது என்று உணர்த்தியது.]

நிலத்தினும் பெரிதே வானினு முயர்ந்தன்று
நீரினு மாரள வின்றே சாரற் 
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தே னிழைக்கு நாடனொடு நட்பே.
இயற்றியவர் : தேவகுலத்தார்.

( தலைவன் வேலிக்குப் புறம்பாக, அவன் வரைந்து கொள்வது வேண்டித் தோழி இயல்பை இழித்துக் கூறியபோது  தலை மகள்  இயற்பட கூறியது )

மலைப் பக்கத்திலுள்ள வலிமையான கரிய கொம்புகளை உடைய குறிஞ்சி மரத்தின் மலர்களைக் கொண்டு, பெரிய தேனை வண்டுகள் செய்தற்கு இடமாகிய, நாட்டை உடைய தலைவனோடு  நான் செய்த நட்பானது பூமியைக் காட்டிலும் அகலமுடையது. ஆகாயத்தை காட்டிலும் உயர்ந்தது. கடலைக் காட்டிலும் ஆழமானது. எனவே தலைவனோடு செய்த நட்பு மிகச் சிறந்தது.

விளக்கம் : பன்னிரண்டு வருடத்திற்கு ஒருமுறை குறிஞ்சி  மலரும். அம்மலரினின்று தேனீக்களால் எடுக்கப்படும் தேன் மிக்க சுவைதரும். அப்படிப்பட்டச் சுவையான,  அளவில் பெரியதான  மலைத்தேனை உடைய  நாட்டிற்கு உரியவனாகியவன் நம் தலைவன். ஆகவே அவனும் உயர்ந்தவன்தான். எனவே நம் தலைவனைப் பழித்துக் கூறாதே.

இப்பாடலில்  நிலம், வான், கடல், என்ற மூன்றும்  பெருமைக்கு எல்லையாகக் கூறப்பட்டுள்ளன.

காலத்தி நாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.  (102)
பயன்றுக்கார் செய்த வுதவி நயன்றூக்கின்
நன்மை கடலிற் பெரிது  (103)
வானுயர் தோற்ற மெவன் செய்யுந் தன்னெஞ்சம்
தானறி குற்றப் படின்  (272)