பாடல் 46 தலைவி கூற்று
இயற்றியவர் : மாமலாடன்
[ தலைவன் பிரிந்த காலத்தில் தலைவி ஆற்ற மாட்டாள் என்று கவலையுற்ற தோழியை நோக்கி, ‘என்னைத் துன்புறுத்தும் மாலைக் காலமும் தனிமையும் தலைவர் சென்ற நாட்டிலும் இருக்கும்
ஆதலால் அவருக்கும் அவைகளால் துன்பம் உண்டாகும். ஆதலால் அவர் விரைவாக வருவார் என்று நினைத்து நான் ஆற்றி இருக்கின்றேன்’ என்று தலைவி கூறினாள்.]
ஆம்பற் பூவின் சாம்ப லன்ன
கூம்பிய சிறகர் மனையுறை குரீஇ
முன்றி லுணங்கன் மாந்தி மன்றத்
தெருவினுண் டாது குடைவன வாடி
இல்லிறைப் பள்ளித்தம் பிள்ளையொடு வதியும்
புன்கண் மாலையும் புலம்பும்
இன்றுகொ றோழியவர் சென்ற நாட்டே.
தோழி=,
ஆம்பல் பூவின் சாம்பல் அன்ன = ஆம்பல் மலரின் வாட்டம் உறுதலை ஒத்த,
கூம்பிய சிறகர் = குவிந்த சிறகுகளை ஒத்த,
மனை உறை குரிஇ = வீட்டினிடத்து தங்கும் குருவிகள்,
முன்றில் உணங்கல் மாந்தி= முற்றத்தில் காய்கின்ற தாணியங்களைத் தின்று,
மன்றத்து = பொது இடத்தினில் உள்ள,
எருவின் நுண்தாது குடைவன ஆடி = எருவினது நுண்மையான பொடியைக்
குடைந்து விளையாடி,
இல் இறை பள்ளி = வீட்டின் இறப்பிலே,
தம் பிள்ளையொடு வதியும் = தம் குஞ்சுகளோடு தங்கி இருக்கும்,
புன்கண் மாலையும் =பிரிந்தவர்க்குத் துன்பத்தைத் தரும் மாலைக் காலமும்,
புலம்பும் = தணிமையும்,
அவர் சென்ற நாட்டு = அத் தலைவர் சென்ற நாட்டு = அத் தலைவர் பிரிந்து
சென்ற நாட்டில் ,
இன்று கொல் = இல்லையோ?
விளக்கம் : என்னுடைய பிரிவினால் தலைவரும் துன்பம் அடைவார். எனவே அவர் விரைந்து வருவார். தலைவர் சென்ற நாட்டிலும் துன்பம் தரும் மாலையும் தனிமையும் இருக்கும் என்பதால் அவற்றால் உண்டாகும் துயரத்தை அறிந்து அவர் என்னை நினைத்து மீண்டு வருவார். அதனை எண்ணி நான் ஆற்றுவேன் ஆயினேன் என்பது தலைவி கருத்து.
தலைவியின் கற்பு நெறி இங்கு படம் பிடித்துக் காட்டப் படுகின்றது.
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழ்க நற்றமிழர்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக