குருவருள்

குருவருள்
குருவே சரணம்

வெள்ளி, 23 ஏப்ரல், 2010

சங்க இலக்கியச் சுவை - புறநானூறு - பகுதி (05)

பாடல் எண் : 182
பாடியவர் : கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
திணை : பொதுவியல் (எல்லத் திணைகளுக்கும்
பொதுவாந் தன்மையை உரைத்தல்)
துறை : பொருண்மொழிக் காஞ்சி (உயிர்க்கு உறுதி
தரும் சிறப்புப் பொருளை உரைத்தல்)


உண்டால் அம்ம, இவ் வுலகம் - இந்திரர்;
அமிழ்தம் இயைவது ஆயினும், ‘இனிது’ எனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவு இலர்;
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சி,
புகழ் எனின், உயிரும் கொடுக்குவர்,பழி எனின்,

உலகுடன் பெறினும், கொள்ளலர்; அயர்விலர்;
அன்ன மாட்சி அனையர் ஆகி,
தமக்கு என முயலா நோன் தாள்,
பிறர்க்கு என முயலுநர் உண்மையானே.


இவ்வுலகம் அழிந்துபடாமல் இன்னமும் இருக்கிறது ஏன் தெரியுமா? வான் உலகில் வாழ்கின்றதாகச் சொல்லப்படுகின்றவர்கள் அமிர்தம் என்ற ஒன்றை அருந்தியக் காரணத்தால் அவர்கட்கு இறப்பில்லை; மூப்பில்லை; பசியில்லை; எந்நாளும் இன்பமே அன்றி துன்பம் இல்லை என நம்பப் படுகின்றது. அத்தன்மை வாய்ந்த அமிர்தம் ஒருவர்க்கு கிடைக்கப் பெற்றால் என்ன செய்வார் தெரியுமா?

விருந்து புறத்ததாத் டானுண்டல் சாவா
மருந்தெனினு வேண்டற்பாற் றன்று.(குறள்-82)
விருந்தாக வந்தவர் வீட்டின் வெளியே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவாமருந்தாகிய அமிர்தமே ஆயினும் அது விரும்பத் தக்கதன்று என்ற வள்ளுவத்தின் அடிப்படையில் அவ்வமிர்தத்தை தானே தனிமையில் உண்ண மாட்டார்கள்.மேலும்,

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற (குறள்- 304)
முக மலர்ச்சியையும் அக மலர்ச்சியையும் கொல்கின்ற சினத்தை விட ஒருவருக்கு வேரு பகை இல்லை என்ற வள்ளுவர் கூற்றிற்கேற்ப எவரிடத்தும்
சினம் கொள்ளார்.

தூக்கம் இல்லாமல் எப்போதும் விழிப்பு நிலையில் இருப்பர். உலகோர் செய்வதற்கு அஞ்சும் தீய் செயல்களைச் செய்ய அஞ்சுவர். தன்னுடைய செயலால் தன்னுயிர் போனாலும் அதனால் புகழ் கிடைக்குமெனில் தன் இன்னுயிரையும் கொடுக்கத் தயங்க மாட்டார்கள். இவ்வுலகப் பொருள்கள் எல்லாவற்றையும் பெற்றாலுன் தன்னுடைய செயலால் தீராத பழி வருமானால் அப்பொருளை ஏற்கமாட்டார்கள்.எப்போது சோர்வின்றி செயலாற்றிக் கொண்டு இருப்பர். இப்படிப்பட்ட சிறப்புகளைக் கொண்டு தன்னலம் கருதாது பிறர் நலத்தையே எப்போதும் கருதி வாழ்பவர்கள் இருக்கின்ற காரணத்தால் தான் இவ்வுலகம் சிறப்புடன் இருக்கின்றது.

ஆகவே புறநானூறு கூற்றுப்படி தன்னலமின்றி பிறர் நலம் காண வாழ முயல்வோமாக.

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லாருக்கும் பெய்யும் மழை!


வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய
பாரத மணித்திருநாடு!







1 கருத்து: